தெலங்கானாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்;குடிசையில் இருந்த ராமர் இப்போது கோபுரத்தில்...

ஹைதராபாத்: தெலங்கானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "குடிசையில் இருந்த ராமரை கோபுரத்தில் வைக்கிறோம்" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இந்த கட்சி 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரசும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஆனால் பாஜக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இதுவரை 6,000 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாகவும், இதனை ஷார்ட் லிஸ்ட் செய்வே தாமதம் என்று சொல்லப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர்களை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்படும் என கூறிய பாஜக கடந்த 22ம் தேதி 52 பெயர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தெலங்கானா பாஜகவின் மாநில பொது செயலாளர் பண்டி சஞ்சய், கரீம்நகரில் போட்டியிடுகிறார். பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் இம்முறை கஜ்வேல் தொகுதியில் சந்திரசேகர ராவுடன் நேரடியாக மோதுகிறார். குறிப்பாக கோஷாமஹால் தொகுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜகஎம்.எல்.ஏ.ராஜாசிங்குக்கு மறுபடியும் இதே தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் ஒதுக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் தேர்தல் பிரசாரத்தையும் பாஜக வீரியமாக மேற்கொண்டிருக்கிறது. கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி தெலங்கானவுக்கு நேரடியாக விசிட் செய்து பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து இன்று தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா, "கடவுள் ராமர் சுமார் 550 ஆண்டுகளாக குடிசையில் இருந்தார். ஆனால் இப்போது அயோத்தியில் ராமருக்கான பிரமாண்ட கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்" என்று கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து பேசியதாவது, "தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியோ, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியோ எந்தவித வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் இங்கு வளர்ச்சியை கொண்டுவந்தது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது மகன் கே.டி.ராமா ராவ்வை முதல்வராக நினைக்கிறார். சோனியா அவரது மகன் ராகுலை பிரதமராக நினைக்கிறார். ஆனால் பாஜக வெற்றிபெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே முதல்வராக நியமிப்போம். கடவுள் ராமர் சுமார் 550 ஆண்டுகளாக குடிசையில் இருந்தார். ஆனால் இப்போது அயோத்தியில் அடுத்தாண்டு ஜனவரி மாம் 22ம் தேதி ராமருக்கான பிரமாண்ட கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி அதனை திறந்து வைத்து தரிசனம் செய்ய உள்ளார்" என்று கூறியுள்ளார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு நவம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.