தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சிக்கல்? வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி.. பின்னணி

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ். இவர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்து இருந்தார். அந்த மனுவில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த பேச்சு தொடர்பாக புகார் அளித்து இருந்தார். அதாவது, அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், இந்து கலாசாரத்த அழிப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகள் வெளிநாட்டில் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு வழக்கு போடுகின்றன' என்று கூறியிருந்தார். இது தொடர்பாக நான் விசாரித்த போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் அர்ஜூன் கோபால் என்பது தெரிந்தது. அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அண்ணாமலை வேண்டும் என்றே இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய் தகவலை பரப்பியுள்ளார். ஆகவே, அண்ணாமலை மீது இந்திய தண்டனை சட்டம் 153,505 (3), 120 ஏ மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் 156(3), 200 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். எனினும் போலீசார் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சேலம் 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பியூஸ் மானுஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நடுவர் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம். எனினும், தமிழக அரசின் அனுமதியை வாங்க வேண்டும் என கூறியது. இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பியூஸ் மனுஷ் புகாரை அனுப்பி அனுமதி கோரியிருந்தார். சேலம் கலெக்டர் இந்த மனுவை அரசுக்கு அனுப்பி வைத்து இருந்தார். இந்த மனுவை பரிசீலித்த அரசு வழக்கறிஞர்கள், இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்கான காரணங்கள் உள்ளது. எனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம்' என அனுமதி அளித்தனர். கடந்த 18 ஆம் தேதி இந்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், வரும் நவம்பர் 4 ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே, அதன்பிறகு அண்ணாமலையிடம் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.