காங்கிரஸ் 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு புதிய யுக்தியைக் கையில் எடுத்துள்ளது

லோக்சபா தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்திற்குக் காங்கிரஸ் புதிய யுக்தியைக் கையில் எடுத்துள்ளது. அடுத்தாண்டு நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு "இந்தியா" கூட்டணி உருவாகியுள்ளது. இதனால் அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் போட்டி கடுமையானதாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 மாநில தேர்தலுக்குப் பிறகு லோக்சபா தேர்தலுக்கான பணிகள் வேகமெடுக்கும் என்று தெரிகிறது. காங்கிரஸ்: இதற்கிடையே அடுத்தாண்டு லோக்சபா தேர்தலுக்குக் காங்கிரஸ் புது திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி இப்போது பண நெருக்கடியில் இருக்கும் நிலையில், Crowd Funding என்ற முறையில் நிதி திரட்டி பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Crowd Funding முறையில் அனைத்து தரப்பினரும் தாங்கள் விரும்பும் தொகையைக் கட்டணமாக அளிக்கலாம். இந்த முறையில் நிதி சேகரித்து பிரசாரம் செய்யக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த சட்டசபைத் தேர்தல் முடிந்த கையோடு, லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் தொடங்க திட்டமிட்டுள்ளது. க்ரவுட் பண்டிங்: க்ரவுட் பண்டிங் முறையில் நிதி சேகரித்து பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளனர். அதாவது நாடு முழுக்க இருக்கும் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் நிதி சேகரித்து, அதை வைத்து பிரச்சாரம் செய்யவே காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக் சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாகவே 25 கட்சிகளைக் கொண்ட ஒரு மாபெரும் கூட்டணியைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் நிலை: ஏஆர்டி எனப்படும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் சமீபத்தில் அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்திருந்தது. அதன்படி தேசிய கட்சியான காங்கிரஸ் சொத்து மதிப்பு ரூ 805.68 கோடியாக மட்டுமே இருக்கிறது. ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் ஆளும் பாஜகவின் சொத்து மதிப்பு ரூ 6,046.81 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு லோக்சபா தேர்தல்களிலும் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் காங்கிரஸுக்கு கிடைக்கும் கார்ப்பரேட் நன்கொடைகளும் படிப்படியாகக் குறைந்துவிட்டன.. அதே நேரத்தில் பாஜகவுக்குக் கிடைக்கும் கார்பரேட் நன்கொடை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்று மடங்கு அதிகம்: கடந்த 7 ஆண்டுகளில், பாஜகவுக்குக் கிடைத்த கார்ப்பரேட் நன்கொடை என்பது மற்ற அனைத்து தேசிய கட்சிகளுக்குக் கிடைத்த மொத்த நன்கொடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். குறிப்பாகக் கடந்த 2017-18 நிதியாண்டில் மற்ற அனைத்து தேசிய கட்சிகளையும் விட பாஜகவுக்கு 18 மடங்கு அதிகமாக நன்கொடை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியும் கூட பல ஆண்டுகளாகவே இப்படி பொதுமக்களிடமே நன்கொடை வாங்கி வருகிறது. ஆம் ஆத்மி ஆன்லைன் மூலமாக நிதி திரட்டும் நிலையில், காங்கிரஸும் கிட்டதட்ட இதேபோல பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெரும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.