எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு அரசியல் பேச வேண்டாம் என்று அவசரமாக கிளம்பி சென்றார்

பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி வேக வேகமாக காரில் ஏறி வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழா இன்று தென் மாவட்டங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக தென் மாவட்டங்களுக்கு அரசியல் தலைவர்கள் படையெடுத்து சென்றனர். அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்து வருகிறது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றுள்ளார். செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்ட மாஜி அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி உடன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவில் உடன் இருந்தனர். பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதை செலுத்திய பின் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அதில், சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான்; சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்த மாமனிதர் முத்துராமலிங்கத் தேவர். இது சாதாரண மண் கிடையாது. இது தேவர் பிறந்த பூமி. தெய்வமாகி அவர் வாழும் பூமி. இது தெய்வீக மண். அவரை வணங்குவது மிகப்பெரிய பாக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக காலத்தில் தேவருக்கு சிலையை ஜெயலலிதா வைத்தது தொடங்கி பல விஷயங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசுகையில் அங்கங்கே அவரை பல்வேறு அமைப்பினர் சிலர் கவனித்தபடி இருந்தனர். அதிமுகவை சேராதா பலரும் கூட அங்கே இருந்தனர். இதனால் பாதுகாப்பு அச்சம் நிலவியது. இதையடுத்து.. அங்கிருந்து உடனே எடப்பாடி கிளம்பினார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்றதும்.. இல்லைங்க.. இப்போ வேண்டாங்க.. இது நல்ல நாள்.. இங்கே அரசியல் பேச வேண்டாம்.. என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். அவசரமாக அவர் அங்கிருந்து கிளம்பி சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.