பூமியை 62,739 கிமீ வேகத்தில் நெருங்கி வரும் சிறுகோள்:நாசா எச்சரிக்கை

LOGI 1 year ago

பூமிக்கு அருகே 620 அடி விட்டம் கொண்ட சிறுகோள் ஒன்று கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது பூமியை தாக்குமா? இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்தும் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வியெழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலாக விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர். அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி இருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் இன்று பூமிக்கு அருகே சிறுகோள் ஒன்று கடந்து செல்ல இருப்பதை கண்டு பிடித்திருக்கிறது. சுமார் 620 அடி விட்டம் கொண்ட இந்த சிறுகோள் மணிக்கு 62,739 கி.மீ வேகத்தில் பூமியை கடந்து செல்கிறது. இதற்கு விஞ்ஞானிகள் 2004 UUI என பெயரிட்டுள்ளனர். இந்த கோள் கடந்து செல்லும் பாதையில் ஏதேனும் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட அது பூமியை தாக்கும் அபாயம் இருக்கிறது. அப்படி தாக்கினால் டைனோசர் அழிந்ததை போல மனிதர்களும் மற்ற அனைத்து உயிர்களும் மொத்தமாக அழிந்துவிடக்கூடும். ஆனால் தற்போது வரை அதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லையென விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் பூமிக்கு நெருக்கமாக 40 லட்சம் கி.மீ தொலைவு வரை நெருங்கி வர இருக்கிறது. 40 லட்சம் கி.மீ பெரிய தொலைவு போல தோன்றலாம். ஆனால் விண்வெளியில் இது கொஞ்சம் தூரம்தான். எனவே இந்த சிறுகோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒருவேளை இந்த கோள் பூமி மீது மோதினால் பூமியின் ஒரு பகுதி கடுமையான சேதமடையும். மறுபகுதியில் உள்ளவர்கள் தப்பி பிழைக்க சிறு வாய்ப்பு இருக்கிறது. அதுவும் கொஞ்ச நாளைக்குதான். ஏனெனில் இந்த கோள் மோதுவதால் ஏற்படும் அதிர்வு நில நடுக்கத்தை உருவாக்கும். இந்த அதிர்வு உலகம் முழுக்க பரவி பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல சிறுகோள் மோதியதால் பூமிக்கு அடியில் இருக்கும் நெருப்பு குழம்பு எரிமலை வழியாக வெளியே வெடித்து சிதறும். உலகம் முழுவதும் உள்ள எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடித்தால் எப்படி இருக்கும்? அதிலிருந்து வெளியாகும் நச்சு புகை உலகை சூழ்ந்து உயிர்களை கொல்லும். இந்த நச்சிலிருந்து தப்பினால் கூட, நாம் விரைவில் அழிய அதிக வாய்ப்பு இருக்கிறது. அதாவது பூமியை புகை சூழ்ந்தால் சூரிய வெளிச்சம் உள்ளே வராது. எனவே தாவரங்கள் அழியும். அது, அதை நம்பியிருக்கும் தாவிர உண்ணிகளையும் அழிக்கும். இது சங்கிலி தொடர்போல மொத்த உலகத்தையே அழித்துவிடும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால் நல்வாய்ப்பாக தற்போது அப்படியான சூழல் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்