எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையை ஏற்றவர்கள், மோடியின் பேச்சை நம்ப மாட்டார்கள் : அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேச்சு

கிருஷ்ணகிரி: “உலக அளவில் போதைப் பொருட்கள் கைமாறும் இடமாக தமிழகம் திகழ்கிறது” என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ குற்றம்சாட்டினார். மேலும், “பழனிசாமியை தலைமையாக கொண்ட கோடிக்கணக்கான தொண்டர்கள், பிரதமர் மோடியின் பேச்சை நம்ப மாட்டார்கள்.” கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே அதிமுக சார்பில் திமுக அரசு பதிவேற்ற நாளிலிருந்து சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீர்கேடு, தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதை கண்டித்தும், போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கண்டன உரையாற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் போதைப் பொருள் இல்லாத தமிழகம் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி அருகில் கூட போதை பொருட்கள், கஞ்சா பொட்டலங்கள் இருக்கிறது. 2 ஆயிரம் கோடி போதை பொருட்கள் கடத்திய வழக்கில் திமுகவில் இருந்த ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருக்கிறது. அவர் அக்கட்சியின் அயலகப் பிரிவில் பொறுப்பில் இருந்திருக்கிறார். தனது கட்சியில் உள்ள ஒருவர் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது முதல்வருக்கு தெரியவில்லை. ஜாபர் சாதிக், 45 முறை வெளிநாடுகளுககு சென்று இருக்கிறார். உலகளவில் போதை பொருட்கள் கைமாறும் இடமாக தமிழகம் திகழ்கிறது. திமுக அரசு இளைஞர்களையும், மாணவர்களையும் காப்பாற்ற வேண்டும். எதிர்கால இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்யவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் திமுக பாராமுகமாக இருந்தால், இந்த சமூகத்தின் மிகப்பெரிய பலிக்கு நிரந்தரமாக ஆளாகி விடுவார். பிரதமர் மோடி, தமிழகத்தில் முதலில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு பிறகு அவரது கட்சி நிகழ்ச்சிக்கு செல்கிறார். அரசு நிகழ்ச்சியாக செலவு கணக்கு காட்டிவிட்டு தனது கட்சி நிகழ்ச்சியை அத்துடன் வைத்திருக்கிறார். இப்படி ஒரு சுயநலமிக்க பிரதமராக மோடி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத கட்டண உயர்வு, ரயில்களில் டைனமிக் கட்டணம் என்ற பெயரில் பலமடங்கு கட்டண கொள்ளை, டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் அதிகரிப்பு ,பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் கட்டணம் உயர்வு என பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆடம்பர ரயில்களின் படத்தை மக்களுக்கு காட்டி அதில் ஏழைகள் அடியெடுத்து வைக்கக்கூட முடியாமல் செய்து விட்டார் மோடி. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகளை ரத்து செய்ததன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3.,700 கோடியை வசூலித்துள்ளனர். ரயில்வேயின் முன்னுரிமை பட்டியலில் இருந்து ஏழைகள்,நடுத்தர மக்கள் நீக்கப்பட்டுள்ளனர். பொது பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு ஏசி வசதி கொண்ட பெட்டிகளின் தயாரிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளன. ஏழைகள்,நடுத்தர வர்க்கத்தினர், மாணவர்கள், நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் ரயில்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.பிரதமர் பொதுக் கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் குறித்து பேசுகிறார். அவர் சார்ந்துள்ள பாஜகவின் தலைவராக இருந்த வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டவர்கள் குறித்து அவர் பேசுவதில்லை. பணக்காரர்களை மனதில் வைத்து ரயில்வேயின் கொள்கைகள் வடிவமைக்கப்படுகின்றன என்றும் மோடியின் உத்தரவாதம் என்பது துரோகத்திற்கான உத்தரவாதம். இந்திய ரயில்வே அதற்கான கொள்கைகளை தயாரிக்கும் போது பணக்காரர்களை மனதில் வைத்துதான் உருவாக்குகிறது. சாதாரண செருப்பு அணிந்தவர்களை விமானத்தில் பயணிக்க வைப்பதற்கான கனவை காட்டி, ஏழைகளின் வாகனமான ரயில்களில் பயணம் செய்வதில் இருந்து அவர்களை மோடி விலக்கி வைத்துள்ளார். சுயநலத்திற்கான திட்டங்களை செயல்படுத்தவே தனியாக சமர்ப்பிக்கப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்துள்ளனர்.மோடியின் மீதான நம்பிக்கை துரோகத்திற்கான உத்தரவாதம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்கள், அவர் வழியில் அரசியல் நடத்தி வரும் பழனிசாமியை தலைமையாக கொண்ட கோடிக்கணக்கான தொண்டர்கள் பிரதமர் மோடியின் பேச்சை நம்ப மாட்டார்கள். இன்றைய தினம் நடைபெறும் ஆர்ப்பாட்டம் தேவையற்றது என அண்ணாமலை கூறுவதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஏன் என்றால் போதை பொருட்கள் ஊற்றுக் கண்ணாக குஜராத் உள்ளது. அங்கிருந்து தான் பிற மாநிலங்களுக்கு போதை பொருட்கள் வருகிறது. அங்கு தான் போதை மாபியாக்கள் உள்ளனர்.'' இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கல்பனா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் வெற்றிச்செல்வன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள்(கிழக்கு) அசோக்குமார் எம்எல்ஏ., (மேற்கு) முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் மனோரஞ்சிதம் நாகராஜ். முனிவெங்டப்பன், சமரசம், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எ.பி. பெருமாள், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் நகராட்சி தலைவர் தங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.