அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சிவகங்கை தொகுதியில் துவக்கம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியில் கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட தேர்போகி பாண்டி 1,22,534 வாக்குகள் பெற்றார். இது 11.3 சதவீதம். இதனால் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென அமமுக கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்குள் 2 முறை சிவகங்கை மாவட்டத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன், தான் இந்த முறை போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள் விரும்பினால் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். அமமுக சார்பில் டி.டி.வி. தினகரன் தான் போட்டியிட போவதாகவும், இல்லாவிட்டால் கடந்த முறை போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி நிறுத்தப்படலாம் என்றும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் பாஜக வலுவாக உள்ள 9 தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்று. அதனால் இந்த தொகுதியை விட்டு கொடுக்க மாட்டோம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் தேவகோட்டை பகுதியில் குக்கர் சின்னத்துடன் பேனர்களை சுவர்களில் ஒட்டி அமமு கவினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இது குறித்து அமமுகவினர் சிலர் கூறியதாவது: டி.டி.வி.தினகரன் போட்டியிட்டால் சிவகங்கை தொகுதியில் அதிகளவில் உள்ள அவரது சமுதாய மக்களின் வாக்குகள் பெரும் வாரியாக அவருக்குத் தான் கிடைக்கும். பழைய தொடர்பில் அதிமுக வினரிடம் இருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கும். காங்கிரஸில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டால் அவரு க்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களின் ஆதரவும் டி.டி.வி.தினகரனுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அவர் போட்டியிட விரும்பா விட்டால், தேர்போகி பாண்டிக்கு சீட் கிடைத்து விடும். அவர் கடந்த முறை ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்றுள்ளார். தற்போது கூட்டணி முடிவாகா விட்டாலும், கட்சி சின்னத்தை பேனர்கள், சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்தி வரு கிறோம் என்று கூறினர்.