திமுக அரசால் பாஜகவினர் பாதிக்கப்பட்டது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறது பாஜக மேலிட குழு

LOGI 1 year ago

சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு செய்ய அக்கட்சியின் மேலிட குழுவினர் இன்று தமிழ்நாடு வருகை தந்தது. இந்த நிலையில், திமுக அரசால் பாஜக பாதிக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் அறிக்கை அளிக்க உள்ளதாக அக்குழுவில் இடம் பெற்றுள்ள சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு முன்பாக அனுமதி இல்லாமல் பிரம்மாண்ட கட்சி கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அக்கொடி கம்பத்தினை அதிகாரிகள் அகற்றினர். அண்ணாமலை வீடு முன்பாக இருந்த கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது அடுத்தடுத்து பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார். அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம் பாயும் என கூறப்படுகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசால் பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்ய டெல்லி பாஜக மேலிடம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி, லோக்சபா எம்பிக்கள் சத்யபால் சிங், பிசி மோகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவை வரவேற்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர். நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களை குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இதுபோன்ற அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் இந்த குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 4 பேர் குழுவில் இடம்பெற்றுள்ள கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "திமுக அரசால் பாஜக பாதிக்கப்பட்டது குறித்து ஆளுநரிடம் அறிக்கை அளிக்க உள்ளோம். இதேபோல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பாஜக தேசிய தலைமைக்கு அறிக்கை அளிக்க இருக்கிறோம்" என்று கூறினார்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்