எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி.. தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த மாலத்தீவு கடற்படை

LOGI 1 year ago

தூத்துக்குடி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை மாலத்தீவு கடற்படை கைது செய்துள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை கடற்படை சிறபிடித்து செல்லும் சம்பவங்களும் மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் சம்பங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இது ஒருபக்கம் என்றால் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டுழியமும் அதிகரித்து வருகிறது. நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை குறிவைத்து தாக்கி வரும் இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி, மீனவர்களிடம் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்தாக தமிழக மீனவர்களை மாலத்தீவு கடற்படை கைது செய்துள்ளது. தூத்துக்குடி தருவகைகுளத்தை சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் 12 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். கடந்த 23 ஆம் தேதி மாலத்தீவு அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாலத்தீவு கடல் பகுதிக்குள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த மாலத்தீவு கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்து மாலி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவலை படகின் உரிமையாளருக்கு மாலத்தீவு கடற்படை கூறிய பிறகே மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள மீனவர்களின் குடும்பத்தினர்கள் அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மாலத்தீவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட முகமது முய்சு புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளர். இந்த நிலையில் தான் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்