நடப்பு உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி

LOGI 1 year ago

புனே: வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.257 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் மற்றும் ஷுப்மன் கில் இணை சிறப்பான துவக்கம் கொடுத்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடும் கேப்டன் ரோகித் இன்றைய போட்டியிலும் அதே அதிரடியை தொடர்ந்தார். ஆனால், அரைசதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். ஹசன் மஹ்மூத் பந்தில் சிக்ஸர் அடித்த ரோகித் அடுத்த பந்தையும் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆகி 48 ரன்களில் அவுட் ஆனார்.ஷுப்மன் கில், விராட் கோலி இதன் பின் கூட்டணி அமைத்தது. இருவரும் பொறுப்புடன் விளையாடினர். ஷுப்மன் கில் 55 ரன்களில் வெளியேறிய பின், விராட் கோலி தனது அதிரடியை தொடர்ந்தார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதிக்கட்டத்தில் அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட, கோலி சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது. நாசூம் அகமது வீசிய 42வது ஓவரில் சிக்ஸ் அடித்து கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 48வது சதத்தை பதிவு செய்தார். அதேநேரம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. விராட் கோலி 103 ரன்களும், கேஎல் ராகுல் 34 ரன்களும் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தனர்.இதன்மூலம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.வங்கதேச அணி இன்னிங்ஸ்: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, ஓப்பனிங் செய்த வங்கதேச வீரர்கள் தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் சிறப்பாக துவக்கம் கொடுத்தனர். இக்கூட்டணி முதல் 10 ஓவர்களை கடந்தும் நிலைத்துநின்றது. மெதுவாக தொடங்கினாலும் போக போக ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர்.இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில் ரன் ரேட் 6-ஐ தாண்டிச் சென்றது. ஆட்டத்தின் 14.4வது ஓவரில் 93 ரன்கள் எடுத்திருந்தபோது இவர்கள் கூட்டணியை குல்தீப் யாதவ் பிரித்தார். முதல் விக்கெட்டாக 51 ரன்கள் எடுத்திருந்த தன்சித் ஹசன் எல்பிடபிள்யு மூலம் அவுட் ஆனார். இதன்பின் வங்கதேசத்தின் இன்றைய கேப்டன் நஜ்முல் சான்டோவை 8 ரன்களில் ஜடேஜா காலி செய்ய, மெஹிதி ஹசன் மிராஸை 3 ரன்னில் சிராஜ் வெளியேற்றினார்.அதுவரை சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார். இதன்பின் முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களில் விக்கெட்டானார். இன்னிங்சின் இறுதி ஓவர்களில் மஹ்முதுல்லாஹ் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார். அவரின் விக்கெட்டை இறுதி ஓவரில் தனது யார்க்கர் பந்து வீச்சில் பும்ரா வீழ்த்தினார்.இதன்பின் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.முன்னதாக, இந்தப் போட்டியில் இன்னிங்ஸின் 9வது ஓவரை வீசினார் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா. இந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் லிட்டன் தாஸ் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 3வது பந்தை வீசும்போது எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட வலியில் சுருண்டு மைதானத்தில் விழ, அணியின் பிசியோ உடனடியாக அவரை சோதித்து பார்த்தார். இதன்பின் பாண்டியாவால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை. இதையடுத்து அவர் ஆட்டத்தில் வெளியேறினார்.பாண்டியாவுக்கு பதிலாக மீதமுள்ள பந்துகளை விராட் கோலி வீசினார். இதனிடையே, பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் அடைந்திருப்பதாகவும், அவருக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்