தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்’ என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ‘தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி இளந்திரையன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:சாலைகளிலும், தெருக்களிலும் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சாலையை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்படுகின்றன. கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாளின்போது கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்படுகிறது யார் எவ்வளவு உயரத்தில் கொடிக் கம்பங்கள் அமைப்பது என்பதில் அரசியல் கட்சிகளிடம் போட்டிகள் ஏற்படுகின்றன. பொது இடங்கள், உள்ளாட்சி இடங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க எந்த சட்டத்திலும் அனுமதி, உரிமம் வழங்கவில்லை. நிரந்தரமாக கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்க போலீஸாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் அதிகாரம் இல்லை.எனவே தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அளித்து அடுத்த 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சி அல்லது அமைப்பிடம் வசூலிக்க வேண்டும்.