திருவண்ணாமலையில் பட்டியலின மக்களுக்கு கடன் வழங்க பிணை கேட்பது ஏன்? - ஆட்சியர் Vs எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.இக்குழுவின் தலைவரும், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினருமான சி.என். அண்ணாதுரை தலைமை வகித்தார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத் முன்னிலை வகித்தார். ஆட்சியர் பா.முருகேஷ் வரவேற்றார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன்: பயிர் கடன் வழங்கும்போது பயிர் காப்பீடு திட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது, காப்பீட்டு தொகை கூடுதலாக கிடைக்கும்.செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி:திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம் தொகுதிகளில் மழை அளவு குறைவு. இதனால் பாதிப்பு ஏற்படும்போது, விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வருவார்கள். யார்? பொறுப்பு. பயிர் காப்பீடு திட்டத்தில் பணம் செலுத்த விவசாயிகளை அறிவுறுத்த வேண்டும்.ஆட்சியர் பா.முருகேஷ்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. பள்ளியில் படிக்காத மாணவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை நிறுத்த வேண்டும். தீண்டாமை கடைபிடிக்காத சமூக நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்துக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.10 லட்சத்துக்கான பரிசு தொகையை பெற, தகுதியான கள ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.எம்எல்ஏ மு.பெ.கிரி: பிணை இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கல்வி கடன், தொழில் தொடங்க பட்டியலின மக்கள் கடன் கேட்கும்போது பிணை கேட்கப்படுகிறது. முதல் முறையாக கடன் கேட்பவருக்கு ‘சிபில் ஸ்கோர்’ தெரிவித்து கடன் வழங்க மறுக்கப்படுகிறது. ஆட்சியர் பா.முருகேஷ்: வங்கியில் கடன் வழங்கும்போது ‘சிபில் ஸ்கோர்’, பிணை ஆகியவை தேவை. பொதுவாக இல்லாமல், குறிப்பிட்ட நபர் மற்றும் கடன் வழங்க மறுக்கும் வங்கி குறித்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எம்எல்ஏ மு.பெ.கிரி: அமைச்சர் தலைமையில் நடைபெறுவது சிறப்பு கூட்டம். ஆனால், 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் வங்கியாளர்கள் கூட்டத்தில் கமிட்டி உறுப்பினர்களாகிய சட்டப்பேரவை உறுப்பினர்களை ஏன்? அழைக்கவில்லை என்பதுதான் கேள்வி. எங்களை கூட்டத்துக்கு அழைத்தால் பொதுவாக பேசாமல், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் நேரிடையாக கேள்வி கேட்போம். ‘சிபில் ஸ்கோர்’ பார்ப்பது சரி. ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க பிணை தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. தொழில் தொடங்க ரூ.1.50 லட்சம் கடன் கேட்பவர்களுக்கு பிணை கேட்டால் சரியா?. ஆட்சியர் பா.முருகேஷ்: வங்கியாளர்கள் கூட்டத்துக்கு அழைக்காதது எனக்கு தெரியாது. அடுத்து வரும் கூட்டங்களில் அழைப்பு விடுக்கப்படும். எம்.பி. விஷ்ணுபிரசாத்: செய்யாறு சுகாதார கோட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு குறைவாக உள்ளது. இதற்கு காரணம் என்ன? செய்யாறு எம்எல்ஏ ஜோதி :செய்யாறு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வருபவர்கள் வேலூர் அல்லது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப் படுகின்றனர். இதுதான் கடைசி கூட்டம்: எம்.பி. அண்ணாதுரை: இதுதான் ஒருங்கிணைப்பு குழுவின் கடைசி கூட்டம். அடுத்த கூட்டம் நடைபெறும்போது, தேர்தல் பணி தொடங்கி இருக்கும். 5 ஆண்டுகளாக கூட்டம் நடத்த ஒத்துழைத்த ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நன்றி. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சிநடத்தி வருகிறார். அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடி மக்களிடம் கொண்டு சேர பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலை தொடர்ந்தால், உட்கட்டமைப்பு வசதி பெற்று தன்னிறைவு பெற்ற மாவட்டமாகும். இவ்வாறு விவாதம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், அன்பரசி ராஜசேகரன், தமயந்தி ஏழுமலை, அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.