பிரபலமான இரண்டு நடிகர்கள் மீது நடவடிக்கை :விதிகள் மீறி பங்களா- நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்

மதுரை: கொடைக்கானலில் விதிகளை மீறி பங்களா கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் மீது உள்ளூர் திட்டக் குழுமம் நடவடிக்கை எடுக்கும் என்று உயர் நீதிமன்றக் கிளையில், அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டி உள்ளனர். இருவரும் கொடைக்கானல் நகராட்சியில் உரிய அனுமதி பெறாமலும், விதிகளைப் பின்பற்றாமலும் பங்களா கட்டியுள்ளனர். கனரக வாகனங்கள் மூலம் மலையிலிருந்து பாறைகள் அகற்றப்பட்டுள்ளன. எனவே, பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. பணிகளை நிறுத்த நோட்டீஸ்: இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, "பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் விதிகளை மீறி பங்களா கட்டியுள்ளதால், கட்டுமானப் பணியை நிறுத்துமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பணிகள் நடைபெறவில்லை. அனுமதி பெறாமல் கட்டிய பங்களாக்கள் மீது உள்ளூர் திட்டக் குழுமம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது" என்றார். இதையடுத்து, அடுத்த விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.