பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட இந்தியாவில் வேலையின்மை அதிகம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்

போபால்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பாத யாத்திரை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் சிறு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது, இங்கு 2 மடங்கு வேலையின்மை நிலவுகிறது. வங்கதேசம் மற்றும்பூடான் நாடுகளைவிட இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தி தனதுஎக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “மத்திய அரசு பணக்காரர்களை மனதில் வைத்து ரயில்வேகொள்கைகளை வகுத்து வருகிறது. ரயில்களில் ஏ.சி. பெட்டிகளின்எண்ணிக்கையை உயர்த்த சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.