புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் படங்களுடன் புதுச்சேரியில் பாஜக பிரச்சாரம் :அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விமர்சனம்

புதுச்சேரி: உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் தொப்பியுடன் சித்தரித்து பாஜக பிரச்சாரத்தை புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. சாதனைகளை சொல்லாமல் மலிவு விளம்பரத்தில் ஈடுபடுகின்றனர் என அதிமுக விமர்சித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் என்ஆர்காங்கிரஸ், அதிமுக, பாஜக இடம்பெற்று ஆட்சியை பிடித்தன. இதில் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. பின்னர் அதிமுக இக்கூட்டணியில் இருந்து வெளியேறி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இச்சூழலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடவுள்ளது. பாஜக வேட்பாளர் இதுவரை இறுதி செய்யப்படவில்லை. புதுச்சேரியில் இருந்து போட்டியிடுவோர் பட்டியலை கூட்டணித்தலைவர் ரங்கசாமியிடம் ஒப்புதல் பெற்று கட்சித்தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில் மத்திய அமைச்சர் பெயர் தொடங்கி அமைச்சர், எம்எல்ஏக்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.வேட்பாளர் அறிவிக்காவிட்டாலும் ஏற்கெனவே பாஜக தேர்தல் பிரச்சாரத்தை புதுச்சேரியில் சுவர் விளம்பரங்கள் மற்றும் இணையங்களில் தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்தபோது அதிமுக தலைவர்களும் முன்னாள் முதல்வர்களுமான எம்ஜிஆர். ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். இதையடுத்து புதுச்சேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுடன் பாஜக சின்னமான தாமரைக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து எம்ஜிஆர் போல் அமைச்சர் நமச்சிவாயத்தை சித்தரித்து இணையத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் பிரதமர் மோடி, நட்டா, முதல்வர் ரங்கசாமி ஆகியோருடன் மறைந்த அதிமுக தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றுள்ளது. "மலர வைப்போம் தாமரையை- மத்திய அமைச்சராக்குவோம் நம்மவரை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் நமச்சிவாயத்தை அவரது ஆதரவாளர்கள் நம்மவர் என்றுதான் அழைப்பார்கள். ஏற்கெனவே எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வெளியிட்டு பாஜகவுக்கு வாக்கு கேட்டனர். இப்போது உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எம்ஜிஆர் போல் சித்தரித்துள்ளனர். மலிவு விளம்பரம்- அதிமுக விமர்சனம்: இதுபற்றி அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் கூறுகையில், "புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் என பாஜகவும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் கடந்த 15 தினங்களுக்கு முன்பே அறிவித்திருந்தனர். ஆனாலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட யாரும் முன்வரவில்லை. வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது. பாஜக இங்கு ஆட்சியில் இருந்தாலும் இவர்களது கூட்டணியில் அதிமுக இல்லாததால் தேர்தலில் போட்டியிடவே பாஜக தயங்குகிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லாத சூழ்நிலையில் எங்கள் மறைந்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை போஸ்டரில் பிரசுரித்தும், பிரதமர் மோடி எங்கள் தலைவர்களை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டும், தங்களுக்கு வாக்களியுங்கள் என புதுச்சேரி பாஜகவினர் விளம்பரம் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். எங்கள் தலைவர்களின் படங்களை பிரசுரித்து வாக்கு சேகரிக்கும் வகையில் மலிவு விளம்பரம் தேடுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும். தங்களது கூட்டணி ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டிய பாஜகவினர், அதை தவிர்த்து எங்களது தலைவர்களின் புகழையும், எங்களது தலைவர்களின் புகைப்படங்களையும் பிரசுரித்து வாக்கு கேட்பது சிறுபிள்ளைத்தனமான செயல். அதிமுக துணையோடு புதுச்சேரியில் ஆட்சி அமைந்த பாஜக கூட்டணி அரசு அதிமுகவுக்கு செய்த துரோகங்களை யாரும் மறந்துவிடமாட்டார்கள். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி என்பதே கொள்கை ரீதியில் பொருந்தாத கூட்டணி" என்று அவர் கூறியுள்ளார்.