இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்: மதுரையில் 125 பேர் கைது

Admin 1 year ago

மதுரை: மதுரையில்  இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 110 பெண்கள் உள்பட 125 பேரை போலீஸார் கைது செய்தனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அளித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று 3-வது நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் இன்று அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமரேசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் கே.குமரேசன் தலைமையில் மகளிரணி மாவட்டத் தலைவர் சாந்தி முன்னிலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலாளர் தாமஸ் விட்லம், மேலூர் ஒன்றியத் தலைவர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் 15 பேர், பெண்கள் 110 பேர் உள்பட மொத்தம் 125 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்