ஆவடி ரயில் நிலையத்தில் தடம்புரண்ட புறநகர் மின்சார ரயில்: ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

LOGI 1 year ago

ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் தடம்புரண்டது. அந்த ரயில் பணிமனையிலிருந்து புறப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால், ரயில் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

சென்னை-அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே அண்ணனூரில் தெற்கு ரயில்வேயின் புறநகர் மின்சார ரயில் பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இருந்து, நேற்று அதிகாலை 5.40 மணியளவில், ஆவடியிலிருந்து, சென்னை-கடற்கரைக்கு செல்லும் புறநகர் மின்சார ரயில், ஆவடி ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது.ரவி(56) என்ற ஓட்டுநர் இயக்கிய அந்த ரயில், எதிர்பாராதவிதமாக ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் நிற்காமல், அரக்கோணம் நோக்கி செல்லும் இருப்பு பாதையில் சுமார் 200 மீட்டர் தூரம் கடந்து சென்று தடம்புரண்டது.இதனால், 9 பெட்டிகள் கொண்ட அந்த மின்சார ரயிலின் முதல் 4 பெட்டிகள் தடம்புரண்டு, அரக்கோணத்திலிருந்து, சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில் பாதையில் சாய்ந்தது. ரயில் என்ஜின் உள்ள பெட்டி மின்கம்பத்தில் மோதி நின்றது. தடம்புரண்ட ரயிலில் பயணிகள் இல்லாததாலும், விபத்து ஏற்பட்ட இருப்பு பாதைகளின் எதிரே ரயில்கள் வராததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

2 இருப்பு பாதைகள் சேதம்: தகவல் அறிந்த தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தலைமையில் ரயில்வே பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அப்போது, ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால், மின் கம்பம், உயர் மட்ட மின் பாதை, 2 இருப்பு பாதைகள் உள்ளிட்டவை சேதமடைந்தது தெரியவந்தது.இதையடுத்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, ஹைட்ராலிக் ஜாக்கிகள் உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் தடம் புரண்ட மின்சார ரயில் பெட்டிகளை மீட்கும் பணியும், மின்பாதையை சீரமைக்கும் பணியும் நடைபெற்றன.இதில், மாலை 4.15 மணியளவில், தடம்புரண்ட மின்சார ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டு, பணிமனைக்கு அனுப்பப்பட்டன. சேதமடைந்த இரு பாதைகள் சீரமைக்கும் பணி மாலை 6 மணிக்கு மேலும் நீடித்தது.சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுஷல் கிஷோர் கூறும்போது, ’முதல் கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கவனக்குறைவால் மின்சார ரயில் தடம்புரண்டது தெரியவந்துள்ளது’ என்றார்.விபத்துக்கான காரணம் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும். அண்ணனூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்