அன்புமணி ராமதாஸ் அவர்களின் கோரிக்கை நிராகரிப்பு! சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டம்!

LOGI 1 year ago

சிவகங்கை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்வதையெல்லாம் நாங்க கேட்க முடியாது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டமாக பதிலளித்துள்ளார். மேலும், அன்புமணி ராமதாஸ் விமர்சிப்பதை நினைத்தெல்லாம் தங்களுக்கு கவலையில்லை எனவும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் எனவும் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறலாம் என ஆருடங்கள் கூறப்படும் நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் படபடவென பட்டாசு போல் வெடிப்பாக பேசியுள்ளார். மருதுசகோதரர்கள் குருபூஜை நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் அமைச்சர்கள் ராஜகண்ணப்ப, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து மருது சகோதரர்கள் பெருமைகளை பேசினர். அப்போது சாதி வாரிக்கணக்கெடுப்பு குறித்த கேள்வி வந்ததும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தங்கம் தென்னரசுவை முந்திக் கொண்டு பதிலளித்தார். அப்படி பதிலளிக்கும் போது தான் அன்புமணி ராமதாஸ் சொல்வதையெல்லாம் நாங்க கேட்க முடியாது என்றும் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருப்பதால் அனுமதி கிடைத்ததும் முறைப்படி மேற்கொள்வோம் என்றார். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த யாரிடம் அனுமதி கிடைக்க வேண்டும் என்பதை அமைச்சர் ராஜகண்ணப்பன் கடைசி வரை தெளிவாக குறிப்பிடவில்லை. ராஜகண்ணப்பன் பேட்டியில் தடுமாறுவதை கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு அருகில் நின்ற அமைச்சர் பெரிய கருப்பனிடம் ஏதோ சொல்ல, உடனே குறுக்கிட்ட பெரியகருப்பன் மருதிருவர் பற்றி நிகழ்ச்சி என்பதால் அவர்களை பற்றி கேளுங்க என செய்தியாளர்கள் சந்திப்பை முடித்து வைத்தார். இதனிடையே அமைச்சர் மூர்த்தி நமக்கேன் வம்பு என்று இந்த விவகாரத்தை பற்றி வாயே திறக்கவில்லை. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பதில் தங்கம் தென்னரசு சாதி வாரிக்கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்தால் அரசின் நிலைப்பாட்டை கொஞ்சம் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பார் என்பது கவனிக்கத்தக்கது. சமூகநீதியை நிலை நிறுத்தவும், வளர்ச்சியின் பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு செல்லவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்பதை பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முதல்வர் ஸ்டாலின் மிகத் தெளிவாக கூறியிருப்பதோடு அதை ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்