சிறுபான்மையினருக்கு எதிராக அதிமுக உள்ளதாக ஒரு தோற்றத்தை திமுக உருவாக்கி உள்ளது: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

LOGI 1 year ago

கூட்டணிக்கு முக்கியத்துவம் வழங்கும் முதல்வர் தண்ணீர் பெற முக்கியத்துவம் வழங்கவில்லை. இரண்டரை ஆண்டுகளில் உதயநிதியை மந்திரி ஆக்கினது மட்டுமே தி.மு.க. அரசின் சாதனை. சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்  இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க. சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை கடந்த காலத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லாம் ஒரு செயற்கை தோற்றத்தை உருவாக்கினார்கள். எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிகாக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படுகின்றபோது பல்வேறு மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்தது. அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்தபோது தமிழகத்தில் ஒரு சிறு பிரச்சனை ஏற்படாமல் சிறுபான்மை மக்களை பாதுகாத்த அரசாங்கம் அ.தி.மு.க. தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தது. அந்த 30 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் இருக்கின்ற சிறுபான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி ஒரு சிறிய பிரச்சனை கூட இல்லாமல் சிறப்பான ஆட்சி தந்த கட்சி அ.தி.மு.க. அரசாங்கம். கூட்டணி என்பது வேறு. கூட்டணி தேர்தல் நேரத்தில் அவ்வப்போது அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது நிலையானது. அ.தி.மு.க. கொள்கை நிலையான கொள்கை. அ.தி.மு.க.வுக்கு மதம் கிடையாது, சாதி கிடையாது. அவரவர்கள் மதம் அவர்களுக்கு புனிதமானது. அதில் யாரும் தலையிட முடியாது. இது ஒரு ஜனநாயக நாடு. ஆகவே இந்த ஜனநாயக நாட்டிலேயே யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. சுதந்திரமாக அந்தந்த மதத்தை பின்பற்றி வாழக்கூடியவர்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது என்று சொன்ன பிறகு தான் இஸ்லாமியர்களின் ஞாபகமே அவருக்கு வருகிறது. இஸ்லாமியர்களின் உணர்வுகளை நான் சட்டமன்றத்திலேயே எடுத்து வைக்கின்றபோது இப்போது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு பாசம் வந்து விட்டது என்று சொன்னார். இல்லை நான் எப்போதுமே சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவன். அனைத்து மதத்தையும் நேசிக்க கூடியவன். எந்த சாதிக்கும், எந்த மதத்துக்கும் அ.தி.மு.க.வுக்கு விரோதம் கிடையாது. ஒரே பார்வையில் தான் நாங்கள் பார்ப்போம். இதனால் மு.க.ஸ்டாலினுக்கு பயம்  பயம் வந்து விட்டது. பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. விலகியதுடன் சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் மு.க.ஸ்டாலினுக்கு வந்து விட்டது. உண்மையிலேயே அந்த மக்களுக்கு நன்மைகள் செய்திருந்தால் அந்த மக்கள் உங்களை நேசித்து இருப்பார்கள். ஆனால் நீங்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். இன்னமும் அ.தி.மு.க. பா.ஜ.க.வின் பி டீமாக இருந்து வருகிறது என சொல்கிறார்கள். நாங்கள் பி டீம் இல்லை. எடீம் என்னும் ஒர்ஜினல் டீம் அ.தி.முக. என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு துணிச்சல் இருக்கிறது. அந்த துணிச்சல் உங்களிடம் இல்லை. இந்த 2 அரை ஆண்டு ஆட்சி காலத்தில் தி.மு.க. அரசால் எந்த நன்மை கிடைத்து இருக்கிறது. இங்கிருப்பவர்கள் சொல்லுங்கள். மேட்டூர் அணையை நம்பி உள்ள 24 மாவட்ட மக்களை பாதுகாக்காமல், தன் பதவியை மட்டுமே தி.மு.க. அரசு பாதுகாக்கிறது. அரிசி விலை கிலோ 10 ரூபாய் உயர்ந்து விட்டது. கூட்டணிக்கு முக்கியத்துவம் வழங்கும் முதல்வர் தண்ணீர் பெற முக்கியத்துவம் வழங்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் காட்சி அளிக்கிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. ஆனால் பா.ஜ.க.வின் பி டீமாக அதிமுக உள்ளதாக ஸ்டாலின் பொய் செய்தியை பரப்பி வருகிறார். அ.தி.மு.க. எப்போதும் ஒரிஜினல் டீம். தி.மு.க. ஆட்சிக்கு வந்து புதிதாக ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக அனைவரிடமும் கையெழுத்து வாங்கினால் நீட் தேர்வு ரத்தாகி விடுமா? பாராளுமன்றத் தேர்தலில் மக்களை சந்திக்கும் போது நீட் தேர்வு ரத்து குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகவே கையெழுத்து இயக்கத்தை துவங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். இரண்டரை ஆண்டுகளில் உதயநிதியை மந்திரி ஆக்கினது தி.மு.க. அரசின் சாதனை. இவ்வாறு அவர் பேசினார்.




செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்