ரூ.101.50 அதிகரித்தது வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2000 ஆக உயர்வு: டீக்கடை, ஓட்டல்களில் விலை உயரும் வாய்ப்பு;

சென்னை: நாடு முழுவதும் நடப்பு மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதை ஈடுகட்டும் வகையில், வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை ரூ.101.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், டீக்கடை, ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலையை, தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. இதனால், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டது. நாடு முழுவதும் சராசரியாக ரூ.1,100க்கு மேல் விற்கப்பட்டது. இதன் காரணமாக, இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சிலிண்டர் விலையை குறைக்க வேண்டுமென எதிர்கட்சியினரும், பொதுமக்களும் ஒன்றிய பாஜ அரசை வலியுறுத்தினர். ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.200 குறைத்தது. இதனால், டெல்லியில் ரூ.1103ல் இருந்து ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.903 ஆகவும், மும்பையில் ரூ.1,102.50ல் இருந்து ரூ.902.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,129ல் இருந்து ரூ.929 ஆகவும், சென்னையில் ரூ.1,118.50ல் இருந்து ரூ.918.50 ஆகவும் குறைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யாமல் அப்படியே வைத்து கொண்டனர். இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான (நவம்பர்) புதிய விலை பட்டியலை, இன்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், கடந்த மாதத்தை போலவே டெல்லியில் ரூ.903, மும்பையில் ரூ.902.50, கொல்கத்தாவில் ரூ.929, சென்னையில் ரூ.918.50, சேலத்தில் ரூ.936.50 ஆக நீடிக்கிறது. ஆனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.101.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அதன் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் ரூ.1,898க்கு விற்கப்பட்ட வர்த்தக காஸ் சிலிண்டர் தற்போது ரூ.101.50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,999.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டெல்லியில் ரூ.1,833, மும்பையில் ரூ.1,785.50, கொல்கத்தாவில் ரூ.1,941 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதும் இந்தவிலையில் தான் வர்த்தக காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படும். வர்த்தக சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.203 அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.101.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களிலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,’ என்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் டீக்கடை, ஓட்டல்களில் உணவு பண்டங்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த 2 மாதத்தில் 300 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய நகரங்களில் விலை
நகரம் வீட்டு சிலிண்டர் வர்த்தக சிலிண்டர்
டெல்லி ரூ.903.00 ரூ.1,833
மும்பை ரூ.902.50 ரூ.1,785,50
கொல்கத்தா ரூ.929.00 ரூ.1,941
சென்னை ரூ.918.50 ரூ.1,999.50
சேலம் ரூ.936.50 ரூ.1,948.50