இலவச வேட்டி, சேலைக்குப் பதிலான நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும்: விடுதலை நாளில் புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: அனைத்து பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500 வரும் தீபாவளி முதல் ரூ.1.000-ஆக உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி விடுதலை நாள் விழா இன்று (புதன்கிழமை) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விடுதலை நாள் உரையாற்றிய அவர், "எங்கள் அரசு பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செவ்வனே செய்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 2022-23-ம் ஆண்டுக்கான மொத்த உற்பத்தி 39,019 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 2021-22-ம் ஆண்டைவிட 4.09 விழுக்காடு கூடுதலாகும். நடப்பு நிதியாண்டில் இது சுமார் 50 ஆயிரம் கோடியாக உயரும் என் முன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று 2021-22-ம் ஆண்டில் 2,14,913-க இருந்த புதுச்சேரியின் தனி நபர் வருமானம் 2022-23-ம் ஆண்டில் 2,22,451-க உயர்ந்துள்ளது. இது 3.51 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டுகிறது. நடப்பு நிதியாண்டில் இது 2,92,223 ஆக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சென்ற ஆண்டு ரூ.30 கோடி மானியமாக வழங்கப்பட்டது. இந்த உதவித் தொகையைப் பயன்படுத்தி தற்போது பாண்லே நிறுவனம் லாபம் ஈட்டத் தொடங்கியிருக்கிறது. கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த துணிகள் பாண்டெக்ஸ் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பல கூட்டுறவு நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளது. மேலும். கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் புதுச்சேரி மாநிலம் சிறந்து விளங்கி வருகிறது. சென்டாக் மூலம் சேர்க்கைப் பெற்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலத்தோடு நிதியுதவியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. உலகில் பல்வேறு நாடுகளில், தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரி உலகத் தமிழ் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த 'தமிழ் வளர்ச்சி சிறகம்' மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தேசிய வாய் ஆரோக்கிய திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்தியதில் புதுச்சேரி மாநிலம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தினைப் பிடித்துள்ளது. புதுச்சேரி அரசு மார்பக நோய் மருத்துவமனையின் ஆய்வகமானது, உட்கட்டமைப்பு மற்றும் தரமான சேவையின் அடிப்படையில் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மாநில அளவிலான காச நோய் ஆய்வகங்களின் தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் முன்னேற்றம் அடையச் செய்வதே இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக் காலங்களின்போது 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500 வரும் தீபாவளி முதல் ரூ.1.000-க உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மத்திய அரசின் விபத்துக் காப்பீட்டுத் திட்டமான 'பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா' திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையை அரசே செலுத்துகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 4,85,680 சிவப்பு உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதற்காக ரூ.92.28 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அரசின் எவ்வித உதவித் தொகையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.1000 வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக புதுச்சேரியில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 70,000 குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்துக்காக மாதம் ரூ.7 கோடி செலவு செய்கிறது. முதியோர் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வூதியத் திட்டத்தில் 2021-22 -ம் ஆண்டில் 10,000 பயனாளிகளும், 2022-23 ஆம் ஆண்டில் 16,769 பயனாளிகளும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,81,616-க உயர்ந்துள்ளது. இவர்களின் உதவித் தொகைக்காக மாதம் ரூ.43.31 கோடி அரசு செலவு செய்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 'முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்' என்கிற புதிய திட்டம் தொடங்கப்பட்டு பெண் குழந்தைகள் பிறந்தவுடன் ரூ.50,000 தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் 18 வருடகாலத்துக்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து சிவப்பு குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு சிலிண்டருக்கு ரூ.300 மற்றும் அனைத்து மஞ்சள் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு சிலிண்டருக்கு ரூ.150 நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை 1,09,028 குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் ரூ.4.04 கோடி செலுத்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தின் அழகு, அமைதி மற்றும் விருந்தோம்பலை விரும்பி வெளி மாநிலத்தவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வந்து, தங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான இனிய சுற்றுலா அனுபவத்தை வழங்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'சுதேஷ் தர்ஷன் 2.0' திட்டத்தில் மாநில சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன." இவ்வாறு ரங்கசாமி கூறினார். தொடர்ந்து பல்வேறு படைப் பிரிவினரின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் சட்டப்பரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார், பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.