இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு விண்வெளிக்கு ஆட்களை அனுப்ப முயற்சி-அடுத்தடுத்து வரும் இஸ்ரோவின் மிஷன்கள் !

சந்திரயானை அனுப்பி வெற்றிகரமாக சந்திரனில் இந்தியா கால் வைத்து உலகையே பிரமிப்பில் ஆழ்த்தியது, அதிலிருந்து உலக நாடுகள் மீள்வதற்குள் அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளை அனுப்பியது. ஆனால் இது வெறும் ஆரம்பம் தான் என்பது போல, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது, செவ்வாய் மற்றும் வெள்ளி கோள்களை ஆய்வு செய்வது என்று பல விண்வெளி ஆராய்ச்சி மிஷன்கள் அடுத்தடுத்து வர போகின்றன. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இஸ்ரோ எந்த நாடுமே முயற்சி செய்யாத நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து சந்திரயான் 3 இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தது, உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் பலரும் சந்திராயன் 3 வெற்றியை சந்தோஷத்துடனும் பெருமையுடனும் கொண்டாடினர். அந்த பரபரப்பு முடிவதற்குள் சூரியனைப் பற்றிய விரிவான ஆய்வுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோளான ஆதித்யா-எல்1 விண்ணில் பாய்ந்தது. அதே போல வெள்ளி, செவ்வாய் கோள்களை ஆய்வு செய்யவும் பூமியின் உட்பகுதியை ஆய்வு செய்யவும் இஸ்ரோ தற்போது தயாராகி வருகிறது. நிசார் செயற்கைக்கோள் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நன்கு புரிந்துகொள்ளும் முயற்சியில், NASA மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆகியவை NISAR ரேடார் செயற்கைக்கோள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளன. வளிமண்டலத்தில் இயற்கையான முறையில் பசுமை இல்ல வாயுக்களை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் காடுகள் மற்றும் ஈரநிலங்கள் - இரண்டு முக்கிய சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பற்றிய விரிவான நுண்ணறிவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்கும்.. ககன்யான் மிஷன் ககன்யான் திட்டமானது, 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரை 400 கிமீ விண்வெளி சுற்றுவட்டப்பாதையில் 3 நாள் பணிக்காக அனுப்பும் ஒரு மிஷனாகும். இந்திய கடலில் தரையிறங்குவதன் மூலம், அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவதன் மூலம் மனித விண்வெளிப் பயணத் திறனை வெளிப்படுத்துகிறது. இது வெற்றி பெற்றால், சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா மாறும். சுக்ரயான் 1 மிஷன் வீனஸ் கிரகத்தைப் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொள்வதே பணியின் முக்கிய குறிக்கோள். இது வீனஸின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தின் ஆய்வு மற்றும் அதன் அமைப்பு, இயக்கவியல் மற்றும் புவியியல் அமைப்பு ஆகியவற்றை ஆராய்வதை உள்ளடக்கியது. சுக்ராயன்-1 திட்டத்திற்கான திட்டமிடப்பட்ட செலவு ரூ.500 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மங்கள்யான் 2 மிஷன் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு படைத்த இந்தியா, செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு விண்கலத்தை அனுப்ப தயாராகி வருகிறது. மங்கள்யான்-2 விண்கலம் செவ்வாய் கிரகத்தின் அம்சங்களையும், கிரகங்களுக்கிடையேயான தூசியையும், செவ்வாயின் வளிமண்டலம் மற்றும் சுற்றுச்சூழலையும் ஆய்வு செய்யும். இவை அனைத்தும் வெற்றிகரமாக அரங்கேறவும், இஸ்ரோ இன்னும் பல சாதனைகளை செய்யவும் நமது வாழ்த்துக்கள்!