டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் I.N.D.I.A. கூட்டணிக்கு எதிரான வழக்கு… அரசியல் கட்சிகளின் கூட்டணிகளை ஒழுங்குபடுத்துவது எங்கள் வேலை இல்லை :

I.N.D.I.A. கூட்டணி என்ற பெயரை பயன்படுத்த தடைகோரிய வழக்கில் அரசியல் கட்சிகளின் கூட்டணிகளை ஒழுங்குபடுத்துவது தங்கள் வேலை இல்லை என்று தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A. என்ற பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிரிஷ் பரத்வாஜ் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். கட்சிகள் தங்களது தேவைகளுக்காக இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதால் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் இந்தியா என்ற சொல்லை கூட்டணி பெயராக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தனி நபர்களோ அமைப்புகளோ சேர்ந்து உருவாக்கும் அமைப்புகளை பதிவு செய்யும் அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் கூட்டணிகளை அங்கீகரிப்பதும் இல்லை, ஒழுங்குபடுத்துவதும் என்று ஆணையம் தெளிவுப்படுத்தி உள்ளது. ஜார்ஜ் ஜோசப் என்பவருக்கும் இந்திய அரசுக்கும் இடையில் நடைபெற்ற வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தேர்தல் ஆணையம் மேற்கோள்காட்டியுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.