தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அதிர்ச்சி தகவல்:பாஜக தலைமையிலான அரசு ரூ.25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி

Admin 1 year ago

புதுடெல்லி: ரூ.25 லட்சம் கோடி கடனை ஒன்றிய பாஜ அரசு தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் சஞ்சய் ஈழவா என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடம், எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என்ற கேள்வி எழுப்பியிருந்தார். பொதுவாக ஒன்றிய அரசின் மீது கேள்வி கணைகளை தொடுக்கும்போது சரியான பதிலை அளிப்பதில்லை. குறிப்பாக பி.எம்.கேர் பற்றியோ அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான வழிமுறையாக கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரம் உள்ளிட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பதில்லை. அதனால்தான் தற்போது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சஞ்சய் ஈழவா எழுப்பிய கேள்விக்கு மத்திய ரிசர்வ் வங்கி, ரூ.25 லட்சம் கோடி வரை தள்ளுபடி செய்துள்ளதாக அதிர்ச்சிகரமான பதிலை அளித்துள்ளது. தற்போதைய மோடி அரசு இதுவரை வராக்கடனாக எவ்வளவு ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது என்று 7.8.2023 அன்று நாடாளுமன்றத்தில் கனிமொழி கேட்ட கேள்விக்கு, ஒன்றிய அரசின் நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதிலளித்தார். அதாவது, ‘கடந்த 9 நிதி ஆண்டுகளில், ரூ.14 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன’ என்று கூறினார். மேலும் இந்த தொகையில் கார்ப்பரேட் தொழில்கள் மற்றும் சேவைகளுக்கான கடன் தள்ளுபடி மட்டும் ரூ.7 லட்சத்து 41 ஆயிரம் கோடி என்றும் கூறியிருந்தார். ஆனால் உண்மையில் தள்ளுபடி செய்யப்பட்ட முதலாளிகளின் கடன் தொகை ரூ.25 லட்சம் கோடி. அதாவது கடந்த 2014-2015 முதல் 2022-2023 காலக்கட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.10.41 லட்சம் கோடி மற்றும் வணிக வங்கிகளில் வங்கிகளில் ரூ.14.53 லட்சம் கோடி என மொத்தம் ரூ.24.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு நாடாளுமன்றத்தில் அப்பட்டமாக பொய் கூறுவதற்கு எவ்வளவு துணிவு? இவர்கள் எந்த அளவிற்கு ஜனநாயகத்தை மதிக்கிறார்கள் தெளிவாக தெரியவந்துள்ளது. இவர்கள் ஜனநாயகத்தையும் மதிப்பதில்லை; மக்களின் உரிமையையும் மதிப்பதில்லை. பொதுவாக வங்கிகள் தொழில் செய்வதற்கு கடன் கொடுக்கிறது. இப்படி வழங்கப்படும் கடன்கள் 2 வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று பிணையுடன் கூடிய கடன், இன்னொன்று பிணையில்லா கடன். சாதாரணமாக சிறுகுறு நிறுவனங்கள் கடன் கேட்டால் அதற்கு எந்த சொத்தை ஈடுகடனாக எழுதி வைப்பீர்கள் என்று கேட்டு அந்த சொத்தின் மதிப்பை மதிப்பீடு செய்து தான் தருவார்கள். ஏதேனும் காரணங்களால் அந்த கடனை கட்ட முடியாவிட்டால் அந்த சொத்தை ஜப்தி செய்து ஏலம் விட்டு, அதில் வரும் பணத்தின் மூலம் அந்த கடன் தொகையில் வரவு வைப்பார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் பிணை இன்றி வழங்கப்பட்ட கடன் வசூலிக்க இயலாமல் இருந்து அது தள்ளுபடி வரை சென்றிருக்கிறது. இப்படி பிணை இல்லா கடன் வாங்கியவர்களின் பட்டியலை கேட்டால் அது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்திற்கு எதிரானது என்றும் அதை தரவேண்டியதில்லை என்றும், பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கிறார். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் நிதிநிலை பற்றி அறிய உரிமை இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் பெற்ற கடன் தொகை மொத்தமே ரூ.65 லட்சம் கோடி தான். ரூ.25 லட்சம் கோடி, பெரு முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த மோடி அரசாங்கம், மாநிலங்களின் கடன்களை தள்ளுபடி செய்வதில் அக்கறை காட்டாமல் இருப்பது ஏன்? இப்படியாக அனைத்திலும் ஊழல், முறைகேடு, தனியார் துறைக்கும் தனது கூட்டாளிகளுக்கும் ஆதரவான நிலையில் இந்த ஆட்சி நடந்து வருகிறது. அந்த கூட்டாளிகள் தான் பாஜ சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்கும் தேர்தல் செலவினத்திற்கும், ஊடக விளம்பரத்திற்கும், விமானங்கள் உள்ளிட்ட தளவாடங்களை கொடுத்து உதவி வருகிறது. அவர்களுக்கு பிரதி உபகாரமாக இந்த மோடி அரசு உதவிகளை கைமாறாக செய்து வருகிறது.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்