இந்திய ராணுவம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நீண்ட தூரம் ஏவப்படும் ஏவுகணைகளை பயன்படுத்த திட்டம்

சீனாவுடன் உரசல் போக்கு நீடித்து வரும் நிலையில், வரும் 2028-29ம் ஆண்டுக்குள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நீண்ட தூரம் ஏவப்படும் ஏவுகணைகளை பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. சமீப காலமாக இந்தியாவின் எல்லை பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் அது தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. எனவே எல்லையை பலப்படுத்தும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. தற்போது வரை வான் பாதுகாப்புக்கு என நம்மிடம் இருக்கும் அயுதங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவிடமிருந்து வாங்கியவைதான். ரஷ்யாதான் நமக்கு முக்கியமான ஆயுத விற்பனையாளர். அதேபோல அமெரிக்காவின் ஆயுதங்களுக்கே ரஷ்யா சவால் விடும் என்பதால், அந்நாட்டின் ஆயுதங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகம். மட்டுமல்லாது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு நம்பகமானது என்பதால் இந்தியா தாராளமாக ஆயுதங்களை வாங்கியிருக்கிறது. ஆனால் இதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. ரஷ்யாவின் ஆயுதங்கள் குறித்த தகவல்கள் ஆயுத சந்தையில் எளிதாக கிடைத்துவிடும். எனவே இதற்கு எதிராக மற்றொரு ஆயுதத்தை எதிரி நாடுகள் பயன்படுத்தலாம். இதை விட முக்கியமான விஷயம், ரஷ்யாவும்-சீனாவும் நெருக்கமாக இருக்கின்றன. நமக்கு அச்சுறுத்தலே சீனாதான் என்கிறபோது, மோதல் உருவானால், ரஷ்யா சீனா பக்கம் நிற்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே நமக்காக ஒரு ஆயுதத்தை நாமே உருவாக்க வேண்டியது அவசியம். அதைத்தான் இந்தியா தற்போது செயல்படுத்தி வருகிறது. அதாவது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) சார்பில் 350 கி.மீ தூரம் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொலைவில் போர் விமானம், கப்பல், ட்ரோன்கள், ஏவுகணைகள் என எது வந்தாலும் அதை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்படும். இதற்காக ரூ.21,700 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதே திறன்களை கொண்ட ஆனால் 150, 250 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் சிறிய ரக ஏவுகணைகளும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன் தாக்குதல் திறன் 80%-90% வரை இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. எதிரிகளை நிலைகுலைய செய்யவும், நமது பலத்தை பறைசாற்றவும் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்த ஏவுகணைகள் நிலை நிறுத்தப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது. தற்போது நம்மிடையே 15, 25, 70 கி.மீ தொலைவில் உள்ள வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை அமைப்பு இருக்கிறது. இதேபோல பலம் வாய்ந்த ஏவுகணை அமைப்பை உருவாக்க முயன்று வருகிறோம் என டிஆர்டிஓ கூறியிருக்கிறது. இது எதிர்வரும் 2028-29ம் ஆண்டுகளில் பயன்பாட்டுக்கும் வரும் என தெரிவித்திருக்கிறது.