ஆனைமலை அடுத்த அங்கலகுறிச்சியில் சேதமடைந்த தடுப்பணையை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்

ஆனைமலை
அடுத்த அங்கல குறிச்சியில் நிலத்தடி
நீர் மட்டத்தை உயர்த்த சேதமடைந்த தடுப்பணையை விவசாயிகளே நிதி திரட்டி சீரமைத்துள்ளனர். கோவை
மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே அங்கலக் குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட
நரி முடக்கு என்னும் மலையடி வார பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு
தமிழக அரசால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால்
பருவ மழை காலங்களில் தடுப்பணையில் தேங்கும்
மழைநீரால், சுற்றியுள்ள விவசாய
நிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது. பராமரிப்பு இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக தடுப்பணை சிதிலமடைந்து வந்தது.
இதனால் நீர் தேங்காமல் விவசாய நிலங்களில் உள்ள திறந்த வெளி கிணறு, ஆழ் குழாய் கிணறு ஆகியவற்றின் நீர்மட்டம்
குறைந்தது. விவசாயம் பாதிக்கப்பட்டதால், தடுப்பணையை
சீரமைக்க தமிழக அரசுக்கு பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து நிதி
திரட்டி சிதிலமடைந்த தடுப்பணையை
சீரமைக்கும் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள்
கூறும்போது, “நிலத்தடி
நீர் செறிவூட்டும் திட்டத்தில்
பல இடங்களில் பண்ணை குட்டைகள் ,தடுப்பணைகள் அமைக்கப்பட்டன.
இப்பகுதியில் பள்ளங்கள்,
சிற்றோடைகளில் வரும்
மழைநீரை சேமித்து வைக்க மலையடிவாரம் முதல்
பாலாறு வரை பல இடங்களில் தடுப் பணைகளை அரசு கட்டியது. கடந்த சில ஆண்டுகளாக தடுப்பணைகள் பராமரிப்பு
இன்றி சிதிலமடைந்து வருகின்றன.
குறிப்பாக தடுப்பணைகளின் கற்கள்
பெயர்ந்தும், சிமென்ட்
பூச்சுகள் உதிர்ந்தும் நீர்க்
கசிவு ஏற்படுவதால் மழைநீரை
சேமிக்க முடியவில்லை. இதனால்
நாங்களே சீரமைத்து வருகிறோம். இதே போன்று பல இடங்களில் பராமரிப்பின்றி உள்ள
தடுப்பணைகளை சீரமைத்து
தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்றனர்.