தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

LOGI 1 year ago

ராமேசுவரம்: தலைமன்னார், நெடுந்தீவு அருகேநடுக்கடலில் 5 விசைப் படகுகளை சிறைப் பிடித்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 37 பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட படகுகளில், 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மெக்கான்ஸ், மரியசியா, ராம கிருஷ்ணன் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளைச் சிறைப் பிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 23 மீனவர்களைக் கைது செய்தனர். மேலும், நெடுந் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பேச்சி முத்து, கிப் ரோத் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர். தலைமன்னார் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 23 பேரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையிலும், நெடுந் தீவு அருகே கைது செய்யப்பட்ட 14 பேரை ஊர் காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையிலும் அடைத்தனர். இதையடுத்து, ராமேசுவரம் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், மீனவப் பிரதிநிதி சேசு ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில், சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தப் போராட்டமும், நவ. 3-ம் தேதி மண்டபம் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும், நவ. 6-ம் தேதி தங்கச்சி மடத்தில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மீனவர்களிடையே அச்சம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கருக்கு, முதல்வர் தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மீன் பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அவர்களிடையே மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் செயல்கள், தமிழக மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று தமிழக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மீனவர்களின் உரிமைகளுக்காக மத்திய அரசு வலுவாக குரல் கொடுக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பாக். வளைகுடா பகுதியில், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். நடப்பாண்டு அக்டோபர் மாதம்மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தடுத்து நிறுத்தவேண்டும். தமிழக மீனவர்கள்தொடர்ந்து கைது செய்யப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன் பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தலைவர்கள் கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி: ராமேசுவரம் மற்றும் தலைமன்னாரை ஒட்டிய, இந்திய பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் இலங்கைக் கடற்படையினரின் தொடர் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதுவதால் மட்டுமே பயன் கிடைத்து விடாது. பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும், இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் மீனவ மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கைது செய்யப்படும் போதும், மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுது வதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் தமிழக அரசு, மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க ஆக்கப் பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடித் தொழிலில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்