நடிகர் பாபி சிம்ஹா வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமீன்

மதுரை: நடிகர் பாபி சிம்ஹா வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா. இவருக்கு கொடைக்கானல் பேத்துப்பாறையில் பங்களா உள்ளது. இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணியை ஜமீர் என்பவரிடம் பாபி சிம்ஹா வழங்கினார். பின்னர் பாபி சிம்ஹா, ஜமீர் இடையே பிரச்சினை ஏற்பட்டு கட்டிடப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பங்களா புதுப்பிக்கும் பணிக்காக ரூ.1.70 கோடி பெற்றனர். இன்னும் ரூ.30 லட்சம் கேட்கின்றனர். அது குறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர் என ஜமீர் உட்பட பலர் மீது கொடைக்கானல் போலீஸில் பாபி சிம்ஹா புகார் அளித்தார்.இப்புகாரின் பேரில் போலீஸார் ஜமீர், அவரது தந்தை காசிம் முகமது, உசேன், மகேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உசேன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவில், கொடைக்கானலில் உள்ள தனது வீட்டை ரூ.1.30 கோடியில் புதுப்பிக்கும் பணிக்காக பாபி சிம்ஹாவுக்கும், ஜமீர் என்பவருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இப்பணிக்காக சிம்ஹா 2022-ல் ரூ.40 லட்சம் வழங்கினார். பணிகள் முடிவடையவில்லை. 5.8.2023-ல் பாபி சிம்ஹா கொடைக்கானல் வந்த போது அவரிடம் ஜமீர் ரூ.30 லட்சம் கேட்டார்.இந்நிலையில், ஜமீர் தன்னை மிரட்டியாக பாபி சிம்ஹா கொடைக்கானல் 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பாபி சிம்ஹாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் ஜமீர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் என்னை பெய்யாக சேர்த்துள்ளனர். இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதேபோல் ஜமீர், காசிம் முகமது, மகேந்திரன் ஆகியோரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. உசேன் சார்பில் வழக்கறிஞர் பி.கிருஷ்ணவேணி வாதிட்டார். பின்னர் 4 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி, விசாரணையின் போது மனுதாரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கவோ, தடயங்களை அழிக்கவோ, தலைமறைவாகவோ கூடாது என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.