பசும்பொன் தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனங்களில் செல்ல ஐகோர்ட் அனுமதி மறுப்பு

மதுரை: பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜைக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கிலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அக். 30-ல் நடத்தப்படும். இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை நடைபெறுகிறது. இந்த நாளில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அனைத்து கட்சித் தலைவர்கள், சமுதாய பெரியவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் லட்சக்கணக்கானோர் பசும்பொன் செல்வது வழக்கம். அதன்படி வாடகை வாகனங்களில் பசும்பொன் செல்ல அனுமதி கோரி போலீஸில் புகார் அளித்தேன். போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்காக வாடகை வாகனங்களில் பசும்பொன் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்ல உயர் நீதிமன்றம் 2017-ல் தடை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்வதற்கு அனுமதி வழங்குவதில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால், வாடகை வாகனங்களை அனுமதிக்க முடியாது. பசும்பொன்னுக்கு மக்கள் இடையூறு இல்லாமல் வந்து செல்வதற்கு 5 மாவட்டங்களில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார். இதையடுத்து நீதிபதிகள், வாடகை வாகனத்தில் செல்ல தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. மனு முடித்துவைக்கப்டுகிறது என உத்தரவிட்டனர்.